ஜோகிந்தர் சர்மாவுக்கு ஐ.சி.சி புகழாரம்

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிராக களத்தில் பணியாற்றி வரும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா 'ரியல் வேர்ல்டு ஹீரோ' என ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2007ல் நடந்த 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி, இந்தியா கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது கொரோனா மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், ஹரியானாவின் ஹிசார் தெருக்களில் இறங்கி ,போலீஸ் அதிகாரியாக ஜோகிந்தர் சர்மா தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே போராடி வரும், சவாலான நேரத்தில் தன்னுடைய கடமையை சிறப்பாக ஆற்றி வரும் ஜோகிந்தருக்கு தலைவணங்குவதாக ஐ.சி.சி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும், '2007ல் 'டுவென்டி-20' உலக கோப்பை ஹீரோ: 2020ல் ரியல் வேர்ல்டு ஹீரோ. கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு ஒரு போலீஸ்காரராக, இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா, சர்வதேச சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது கடமையை நிறைவேற்றி வருகிறார்' எனவும் கூறியுள்ளது. ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட கூடாதென விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.