கொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: கொரானா பாதிப்பில் மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள் நிதி வழங்குங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் வேண்டுகோள் விடுத்த சில நிமிடங்களில் இந்தி நடிகர் அக்சய்குமார், கொரோனா நிவாரண பிரதமர் நிதிக்காக ரூ.25 கோடியை வழங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நிதிகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பாக பிரதமர் கூறியிருப்பதாவது: கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது, உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் புனரமைப்பு , மேம்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் முன்கூட்டிய ஆராய்ச்சி முடிவுகள் இத்தகைய ஒருங்கிணைந்த செயலின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகின்றன.


எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம். பொதுமக்களின் சிறிய உதவிகளையும் அரசு ஏற்று கொள்ளும். இது இந்திய மக்களின் வாழ்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். பேரிடர்களின்போது மக்களை காக்க இது போன்ற நிதி பெரும் அளவில் உதவியாக இருக்கும். அனைவரும் நிதி வழங்குங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.